மக்களே உஷார்..! உலா வரும் ரூ.500 கள்ள நோட்டுகள்.. ரிசர்வ் வங்கியின் ஸ்டெப் என்ன?

0
62

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் ரூ.9,760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திருப்பிக்கொடுக்கப்படாமல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால், செய்வதறியாது தவித்து வரும் ரிசர்வ் வங்கிக்கு அடுத்த அடியாக இந்தியாவில் பல கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் உலா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம், நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.

அதன் பிறகு டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் உட்பட ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டும் இந்த வசதி கிடைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதாவது கடந்த மே 19ஆம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப்பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, அன்றைய தினத்தில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. ஆனால், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி, 2000 ரூபாய் நோட்டுகளில் 97.26 விழுக்காடு மட்டுமே வங்கிகளுக்குத் திரும்பியிருக்கிறது.

மீதமுள்ள ரூ.9,760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை, அவை எங்கேயோ முடங்கிக் கிடக்கிறது என ரிசர்வ் வங்கி வேதனை தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி இன்னொரு தகவலை வெளியிட்டிருக்கிறது. 500 ரூபாயில் கள்ள நோட்டுக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, 91,110 ரூ.500 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டை விட 14.6 விழுக்காடு இது அதிகமாகும். கள்ள நோட்டுகளின் ஊடுருவலைத் தடுக்க எத்தனை விதமான முயற்சிகளை ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. இருந்தபோதிலும், போலி நோட்டுக்களின் புழக்கம் குறையவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கி உள்ளனர். மேலும், பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போலி நோட்டுகளை அடையாளம் காண, கூடுதலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here