மனைவி உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு.. காரில் தப்பிய கணவர் லாரி மோதி பலி.. போலீஸ் விசாரணை..!

0
225

தஞ்சாவூரில் தனது மனைவி உள்பட மூவரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிச் சென்ற கணவர் லாரி மோதிய விபத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தர் கணேஷ், இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சுந்தர் கணேஷ், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருப்பு ஓய்வு பெற்றுவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். அவரது மனைவி நித்யா, வங்கி ஒன்றில் மண்டல மேலாளராக பணியாற்றி வந்தார்.

தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சுந்தர் கணேஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவியின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தனது காரை எடுத்துச் சென்ற சுந்தர் கணேஷ், தஞ்சை பரிசுத்தம் நகர்-யாகப்பா நகர் மெயின்ரோடு சந்திப்பில் உள்ள பால் நிலையம் அருகே திடீரென காரை நிறுத்தினார். அரிவாளுடன் கீழே இறங்கிய அவர் பால் நிலையத்திற்குள் சென்றார்.

பின்னர், அங்கிருந்த பால் கடை உரிமையாளர்களான தஞ்சையை அடுத்த திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (34) மற்றும் கோபிநாத் (32) ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் தாமரைச்செல்வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், கோபிநாத்துக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த கொடூர சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அரிவாளால் வெட்டப்பட்டு கிடந்த தாமரைச்செல்வன், கோபிநாத் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, சுந்தர் கணேஷின் மனைவியும் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் அவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மனைவி உள்பட மூவரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற சுந்தர் கணேஷ காவல் துறையினர் தீவிரமாக தேடினர்.

சுந்தர் கணேசை பிடிக்க மாவட்டம் முழுவதும் காவல் துறையினரை தயார்படுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், காரில் தப்பிச் சென்ற சுந்தர் கணேஷ் முத்தாண்டிப்பட்டி பகுதியில் எதிரே சென்ற லாரி மீது மோதி விபத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சுந்தர் கணேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சுந்தர் கணேஷால் வெட்டப்பட்ட கோபிநாத் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து, தாமரைச்செல்வனும், சுந்தர் கணேஷின் மனைவி நித்யா ஆகியோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும், தனது மனனவி உள்பட மூவரையும் சுந்தர் கணேஷ் வெட்டியதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here