சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது” என்றார்.
தொடர்ந்து பாமக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “டாக்டர் ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி தனது கூட்டணியை மாற்றிக் கொண்டு இருக்கிறார்.
ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும், தண்ணீர் வற்றினால் சென்றுவிடும், அப்படி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிக்கொண்டு இருக்கும் கட்சி குறித்து பதில்சொல்ல வேண்டியது இல்லை.
முன்பு ராமதாஸ் ஒரு பேட்டியில், பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுப்பேன் என பேசினார். ஆனால், இப்போ அந்த கட்சியிலேயே இணைந்து அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதாக கூறுகிறார்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கட்சியை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரித்து வருகிறது. அதிமுக-வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை நம்பி இல்லை. கூட்டணி கட்சிகள் வந்தால் வரவேற்போம், வராவிட்டாலும் எங்களுடைய சொந்த பலத்தில் நிற்போம்” என்றார்.