Naam Tamilar Katchi: நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சியினர் தங்களது கட்சிக்கான பணிகளை தீவிரமாக செய்துவருகின்றனர். பல்வேறு இடங்களில் தங்களது பிரச்சாரங்களை தொடங்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கபடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது புதிய சின்னம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக கொந்தளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயி சின்னம் வழங்க கோரி பல்வேறு மனுக்களை வழங்கினார். தொடர்ந்து, நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இருந்தபோதிலும், அவருக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஆகையால், நாம் தமிழர் கட்சிக்கு, ஆட்டோ, படகு, மைக் ஆகியவற்றில் ஒன்று சின்னமாக வழங்குவதாகவும் மூன்றில் ஒன்று தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கூறியது.
அந்த வகையில், தற்போது நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, விவசாயி சின்னம் பொறித்த போஸ்டர்கள் அடிக்கப்பட்டு, ஒட்டப்படாமல் இருந்த நிலையில் தற்போது சின்னம் மாறியதால் கட்சியினர் வேதனையாக உள்ளனர்.
மேலும், மக்கள் மனதில் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக விவசாயி சின்னம் பதிந்திருந்த நிலையில் தற்போது மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் மக்களிடம் இந்த புதிய சின்னைத்தை கொண்டு சேர்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.