நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பேரில் தற்போது கமல் தனது பிரச்சாரத்தை வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறார்.
முதலாவதாக அவர், ஈரோடு, சேலம், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மதுரையில் போட்டியிடும் சு.வெங்கடேசன், திருப்பூரில் போட்டியிடும் கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார்.