ஈரோடு தொகுதியானது கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
ஆனால், தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. இதனால், கணேசமூர்த்திக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் சில நாட்களாக கணேசமூர்த்தி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி கனேசமூர்த்தி திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதனையறிந்த குடும்பத்தினரை அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைகாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தொடர் சிகிச்சையில் இருந்தபோது கணேசமூர்த்திக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பேரிலே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.