PM Modi: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங். கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.
கடந்த முறை நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டும் பாஜக வென்றது. இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றும் விதமாக தீவிர பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில், திரிணமுல் காங்., மஹுவா மொய்த்ராவை எதிர்த்து, பாஜக சார்பில் அம்ரிதா ராய் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அம்ரிதா ராயிடம், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, “மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், ஏழை மக்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர்.
இப்படி கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை, அங்குள்ள ஊழல்வாதிகளிடம் இருந்து அமலாக்கத் துறை கைப்பற்றியது. அவர்களிடம் கைப்பற்றப்பட்ட சொத்துகள், பணம் உள்ளிட்டவற்றை மீண்டும் ஏழை மக்களுக்கே கொடுப்பதற்கான பணிகளை செய்து வருகிறேன்.
இதற்கு தேவைப்படம் சட்ட வழிகளையும் நான் ஆராய்ந்து வருகிறேன். அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். இவர்களுக்கு, வருகிற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
பாஜக தலைமையிலான கூட்டணி, இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும், ஊழலற்ற நாட்டிற்காகவும் போராடி வருகிறது” என மோடி பேசியதாக கூறப்படுகிறது.