ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘முத்து’. இந்த படம் மீண்டும் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய விழா கொண்டாட்டத்தின்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது படையப்பா படத்தின் நீலாம்பரி கதாபாத்திரம் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், “படையப்பா படம் வெளிவந்தபோது நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை வைத்து தான் எழுதப்பட்டது என்றெல்லாம் சொன்னார்கள். அது உண்மைதான். அந்த கதையில் இருக்கும் ஒரு பிடிவாதமான பெண் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்தபோது ஜெயலலிதா தான் நினைவிக்கு வந்தார்.
அவரை வைத்து தான் அந்த கதாபாத்திரத்தை எழுதினேன். அந்த அளவிற்கு ஒரு தைரியமான பெண் இந்த கதாபாத்திரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்” என்றார்.
இதனைக் கண்ட அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தற்போது இந்த சர்ச்சைப் பேச்சு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “அம்மாவாக இருக்கட்டும், புரட்சித் தலைவரா இருக்கட்டும் மறைந்த தலைவர்கள் குறித்துப் பேசுவது நாகரீகம் அற்ற செயலாகும். பண்பட்டவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.
முத்து படம் திரும்பவும் ஓடவேண்டும் என்பதற்காகத் தேவையில்லாத விமர்சனம் செய்து அதன் மூலம் வசூல் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு வேறு எதையாவது பேசியிருக்கலாம். தேவையில்லாமல் எதற்கு அம்மாவை இழுக்க வேண்டும்? இனிமேலும் அம்மா குறித்து பேசினா நிச்சயம் அவர் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இதே கருத்தை கே.எஸ்.ரவிக்குமார் அம்மா இருக்கும்போது கூறிவிட்டு வெளியில் நடமாட முடியுமா? இந்நேரம் ரவிக்குமாரின் பேச்சை ரஜினிகாந்த் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. கே.ஸ்.ரவிக்குமாருக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்” என்றார்.