‘அயலான்’ படத்திற்கு தடை..! அடுத்தடுத்து வரும் சிக்கல்.. திணறும் படக்குழு..

0
120

Ayalaan Release Issue: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.

ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு ரத்தானது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. மீதம் இருந்த அந்த காட்சிகளைப் படமாக்கி முடிக்க மூன்று வருடங்களாகியதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற விஷயங்கள் இருப்பதால் படம் திரைக்கு வர தாமதமானது. இப்படி பல தடைகளைக் கடந்து அயலான் தற்போது திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது திடீரென அயலான் பட ரிலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் அயலான் படத்தை முதலில் தயாரிக்க தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் அதிக பணம் தேவைப்பட்டதால் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 கோடி கடன் வாங்கியது.

அதன்பின் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்தினால் அயலான் படத்தை தொடர்ந்து தயாரிக்க முடியாத சூழலில் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம், 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அயலான் படத்தை பெற்றுக் கொண்டது.

மேலும் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனையும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அந்த கடனில் முதல் தவணையாக ரூ.3 கோடியை செலுத்திய நிலையில் மீதம் இருக்கும் தொகையை தரவில்லை என டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில், “எங்களுக்குச் செலுத்த வேண்டிய 14 கோடி 70 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை தராமல், KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்தடுத்து படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

எங்களுக்கு சேர வேண்டிய தொகையைக் கொடுக்கும் வரை சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது” என்று டி.எஸ்.ஆர். நிறுவனம் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 14) நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். பல பிரச்சினைகளை கடந்து அயலான் திரைப்படம் திரைக்கு வரவிருந்த நிலையில் தற்போது அப்படத்திற்கு அடுத்த பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் படக்குழு மிகவும் அப்செட்டில் உள்ளது.

மேலும், இன்று (டிச.15) வெளியாக இருந்த ஆலம்பனா படம் ரிலீஸ் ஆகாததால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை. ஆனால், அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால் அதற்குள் இந்த விவகாரத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here