அரசு முன்னெடுக்கும் ‘அறிவுத் திருவிழாவில்’ பங்கேற்றுப் பயன்பெறுங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

0
142

தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம்.

இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் CIBF2024 (சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி) இன்று தொடங்கியது.

இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன.

இதற்காக பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. மேலும், எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி, அளிக்கவும் பெரும் பொருட்செலவில் நமது அரசு முன்னெடுக்கிறது. இந்த உலக அளவிலான அறிவுத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 14 காளைகளை அடக்கி இளைஞருக்கு கார் பரிசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here