Vijay vs Ajith: தளபதி விஜய்யின் ‘தளபதி 68’ திரைப்படமும், அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படமும் திரைக்கு வரவுள்ள நாள் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தைப் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மேலும், நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.
வெங்கட் பிரபு, சிம்புவை ‘மாநாடு’ என டைம் ட்ராவல் படத்தை இயக்கினார். இதனால், விஜய்யின் 68ஆவது படமும் ஒரு டைம் ட்ராவலை வைத்து எடுக்கலாம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மேலும், ரசிகர்களுக்கு ஹைப்பை ஏற்படுத்தும் விதமாக ‘இதுவரை பார்த்திடாத விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம்’ என இயக்குநர் ஒரு தகவலைக் கூறியிருக்கிறார். இந்த படத்தில் தந்தை – மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் முக்கிய காட்சிக்கு ரூ.6 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 10 நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த காட்சியில் விண்டேஜ் விஜய் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் இளமையான தோற்றத்தைக் கொண்டுவர டீ-ஏஜிங் (De – Aging technique) பிராசஸ் எனப்படும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகத்தான் 6 கோடி ரூபாய் செலவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு சுவாரசியத் தகவல் ‘தளபதி 68’ குறித்து தகவல் வெளியாகிவரும் நிலையில் தற்போது ‘தளபதி 68’ படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படமும் அஜித்தின் பிறந்தநாளான ‘மே 1’ ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது ‘தளபதி 68’ படமும் அவரது பிறந்தநாளன்று திரைக்கு வரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.