‘kalaignar 100 years’: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழ் திரைத்துறை வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும்விதமாக ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கலைஞர் கருணாநிதியின் திரைப்பயணம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக அவரின் நூறாவது ஆண்டை சிறப்பிக்க இந்நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.
அறிவியலும், கலையும் இணைந்து உருவான திரைத்துறை எனும் ஊடகத்தில் புராணக் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அதனை மாற்றி சமூகப் பிரச்சினைகள் பக்கம் தமிழ் திரைத்துறையின் பார்வையைத் திருப்பியவர் கலைஞர் கருணாநிதி.
அந்த வகையில், ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், திரைத்துறை நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.
வரும் டிசம்பர் 24ஆம் தேதி இந்நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், சென்னையில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயலால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 6ஆம் தேதி நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ‘கலைஞர் 100 விழா’-வை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால், தற்போது அங்கு ரஞ்சிக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் அந்த இடம் மாற்றப்பட்டுக் கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மெகா ஹிட்டான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’.. இயக்குநருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கிய சதீஷ்!