‘ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்’ – இயக்குநர் அமீர் கோரிக்கை..

0
199

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல முக்கிய நகரங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மூன்று நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் பங்கேற்று காளைகள், வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த காளை மற்றும் வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டன. இரண்டாமிடம் பிடித்த காளை மற்றும் வீரர்களுக்கு பைக் பரிசளிக்கப்பட்டது.

இதனிடையே பரிசு வென்ற வீரர்கள், தங்களுக்கு கார் பரிசளிப்பதை விட அரசு வேலை வழங்கினால் உதவியாக இருக்கும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர். இதே கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

‘தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்..’

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, மத்திய அரசிடமும், சுப்ரீம் கோர்ட்டிடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதனை, தமிழ்நாடு அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன். ‘தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!’ என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைய வேண்டும்.

அதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் புகை பிடிக்கும் காட்சி மீதான மனு தள்ளுபடி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here