பருத்திவீரன் பஞ்சாயத்தை அமீர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கொண்டு போன சம்பவம் தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் தொடர்பான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. ஞானவேல் ராஜா அளித்த ஒரு பேட்டியில் அமீருக்கு வேலையே தெரியாது. எனது காசில்தான் அவர் தொழில் கற்றுக்கொண்டார். பன்றிகளில் பொய் கணக்கு காண்பித்தார். அவர் ஒரு திருடன் என பல்வேறு விஷயங்களை பேசினார். அவரது பேச்சுக்கு அமீரும் நீண்ட அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அமீர் வெளியிட்டிருந்த அறிக்கையில், பருத்திவீரனில் என்ன நடந்தது என்பதை தெரிந்த பெரிய மனிதர்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்து சசிகுமார், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் முதல் ஆளாக அமீருக்கு ஆதரவாக நின்றனர்.
இதனையடுத்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த கரு.பழனியப்பன், இந்த விஷயத்தில் சிவக்குமார் குடும்பம் பின்னணியில் இருக்கிறதோ என்ற சந்தேக நிழல் விழுவதை தவிர்க்க முடியவில்லை என கூறி ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க சிவக்குமார் கூற வேண்டும் என தெரிவித்திருந்தார். அதேபோல் இயக்குநர் பாரதிராஜாவும் அமீருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். சூழல் இப்படி இருக்க ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையே பருத்திவீரன் பட ரிலீஸ் சமயத்தில் தயாரிப்பாளர் கவுன்சிலில் வைத்து அமீர் மிரட்டப்பட்டார் என்ற தகவலும் வெளியானது. அதாவது, மேலிடத்தில் பேசிவிட்டோம். அதனால் நீங்கள் பருத்திவீரன் படத்தை எங்களுக்கு எழுதி கொடுங்கள் என மிரட்டப்பட்டார் என பேசப்பட்டது. ஆனால் அதுகுறித்து எதுவும் உறுதியாக தெரியாமல் இருந்தது. அந்த சமயத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தார்.இந்நிலையில் அமீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “தயாரிப்பாளர் சங்கத்தில் எனக்கு எதிராகத்தான் எல்லோரும் நின்றார்கள். எல்லோருமே என்னை குற்றவாளியாகத்தான் பார்த்தார்கள். பருத்திவீரன் படத்தை என்னிடமிருந்து பிடுங்குவதில்தான் குறியாக இருந்தார்கள்.
முதலமைச்சரே சொல்லிவிட்டார் என்றார்கள். நான் உடனே நேராக சென்று முதலமைச்சரையே சந்தித்துவிட்டேன். கலைஞர் கருணாநிதியிடம் சென்று, ‘ஐயா நீங்கள்தான் இந்தப் படத்தை என்னிடமிருந்து வாங்கி கொடுக்க சொன்னீங்களாமே என்று கேட்டேன். அதற்கு அவரோ நான் ஏன்யா சொல்லப்போறேன். இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்டார் என அமீர் குறிப்பிட்டார்.
முன்னதாக ஞானவேல் ராஜா தெரிவித்திருந்த வருத்தத்தில், ” “பருத்திவீரன் பிரச்னை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. நான் இதுநாள்வரை அதை பற்றி பேசியதில்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் குறிப்பிடுவேன். அவரது குடும்பத்தினரிடமும் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள் என்னை காயப்படுத்தியது.அதற்கு பதிலளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் நான் அதற்கு மனபூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் நான் மதிப்பவன்” என குறிப்பிட்டிருந்தார்.
Home பொழுதுபோக்கு பருத்திவீரன் சர்ச்சை.. கருணாநிதியின் பெயரை சொல்லி மிரட்டல்.. அமீர் செஞ்ச தரமான சம்பவத்த பாருங்க???