‘மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்’ – உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
118

சென்னை: நடிகை திரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா தனது ‘X’ தளத்தில்கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், மன்சூர் அலிகானின் இந்த பேச்சுகு நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் ‘X’ தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென கூறிய நீதிபதி எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? எனவும் மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞர் குரு தனஞ்ஜெயிடம் கூறினார். இதனையடுத்து, மன்சூர் அலிகானின் மனு குறித்து நடிகைகள் திரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி அந்த வழக்கு இன்று (டிச.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here