விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது தாய் பாத்திமா, தனது மகளுக்காக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ‘விஜய் ஆண்டனி’. பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, ஒருகட்டத்தில் நடிகராக களம் இறங்கினார். அவரது சொந்த செலவில் படங்களை இயக்கி நடிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து, நான், சலீம், பிச்சைக்காரன் என ஹிட் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக அவர் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிப்பு, இசை என தன்னை மிகவும் பிஸியாக வைத்துக்கொண்டார். சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் பாகம் இரண்டு படம் மாபெரும் வெற்றியடைந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் சினிமா வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் மகளின் இறப்பை எண்ணி பெரும் சோகத்தில் இருந்து வந்தார்.
அதனை அவ்வபோது ட்விட்டர், இன்ஸ்டா பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வந்தார். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “மீரா தங்கம், உனது பியானோ நீ தொடுவாய் என நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. நீ எங்களை விட்டு மிக விரைவாக சென்று விட்டாய். ஒருவேளை இந்த உலகம் உனக்கானது அல்ல என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் அம்மா இங்கு தான் இன்னும் இருக்கின்றேன், இறப்பிற்கும் வாழ்க்கைக்கு இடையிலான இந்த போராட்டத்தை குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
வாழ்க்கை எனக்கு இருள் சூழ்ந்து விட்டது, உன்னை சந்திக்கும் வரை நன்றாக உணவினை உண்டு மகிழ்ச்சியாக இரு நான் உன்னை மிகவும் மிஸ் பண்றேன்” என்று உருக்கமான பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.