Thangalaan: நடிகர் விக்ரம் நடிப்பில் ஜனவரி 26ஆம் தேதி திரைக்கு வரவிருந்த ‘தங்கலான்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் தள்ளிப்போனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்துக் காணலாம்..
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பலர் நடித்துள்ளனர். ‘தங்கலான்’ அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி திரைக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ‘தங்கலான்’ படத்தின் சில போர்ஷன்கள் திருப்திகரமாக வரவில்லை என்பதால் அதனை ரீ-ஷூட் செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படமும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கலான் திரைப்படமும் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதால் இரண்டு படங்களும் ஒரே தினம் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருந்த ‘இந்தியன்-2’, ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. அதேபோல், சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படமும் ஏப்ரல், மே மாதங்களில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அடுத்த ஆண்டு பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரவிருப்பதால் பெரிய ஹீரோக்கள் படங்கள் ஒரே தினத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.