‘THER THIRUVIZHA’: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் முதல் பாடலான ‘தேர் திருவிழா’ பாடல் இன்று (டிச.18) மாலை 5 மணிக்கு வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது. லால் சலாம் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. மேலும், இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து, இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது ‘லால் சலாம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘தேர் திருவிழா’ பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தேர் திருவிழா’ என தொடங்கும் இப்பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.