விடுதலை படத்தின் பட்ஜெட் உயர்வுக்கு என்ன காரணம்?.. விளக்கம் அளிக்கும் வெற்றிமாறன்!

0
59

Director Vetrimaran : விடுதலை படத்தை 4 கோடியில் எடுக்க திட்டமிட்டு 60 கோடி ரூபாய்க்கு மேல் செலவானதற்கு என்ன காரணம் என இயக்குனர் வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மெகா ஹிட் அடித்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட விசாரணை படம் 35 நாட்களில் எடுக்கப்பட்டது. அதேபோல தான் இந்த படத்தையும் எடுக்க முடிவு செய்தேன். ஆனால், நேரடியாக அந்த இடங்களுக்கு சென்றபோது ​​20 நாட்களில் வெறும் 10 விழுக்காடு மட்டுமே படமாக்க முடிந்தது. ஆனால் அதற்குள் பட்ஜெட்டில் 70 விழுக்காடு முடிந்துவிட்டது.

படப்பிடிப்பிற்காகத் தேர்ந்தெடுத்த மலைகளில் வாகனங்கள் செல்ல தடை ஏற்பட்டது. படத்திற்கான அனைத்து உபகரணங்களையும் கைகளில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மலையின் உச்சியில் 250 பேருக்கு கூடாரங்கள் அமைத்தோம். அங்குள்ள கிராம மக்களுக்கு கழிப்பறைகள் கட்டினோம், அதனை நாங்களும் பயன்படுத்தி கொண்டோம்.

ஒரு நாள் மிக கடுமையான புயல் தாக்கி எங்களின் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது என்னால் இந்த படத்தை முடிக்க முடியாது என்பதை உணர்ந்தேன். பிறகு தயாரிப்பாளரை கூப்பிட்டு நாம் வேறு ஏதாவது படம் எடுக்கலாமா என்று கேட்டேன். ஆனால், ஏற்கனவே இந்த படத்திற்காக நிறைய பணம் செலவாகிவிட்டதை எனக்கு உணர்த்தினார்.

மேலும், இந்த படத்தையே எடுக்கலாம் என்றும் கூறினார். பிறகு விடுதலை படத்திற்கு முதலில் தேர்ந்தெடுத்த இடங்களை மாற்றி வேறு பகுதிகளைத் தேர்வு செய்தேன். படத்தின் பெரும்பாலான காட்சிகளை 10 நாட்களுக்குள் முடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியும் எதிர்பார்த்ததை எடுக்க முடியவில்லை. அந்த சமயத்தில் பட்ஜெட் ஆரம்பத்தில் மதிப்பிட்டதை விட மூன்று மடங்கு அதிகமானது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டது படத்தை அதிக விலைக்கு வியாபாரம் செய்ய தயாரிப்பாளருக்கு உதவியது. அவர் படத்தில் வந்த பிறகு மொத்த படமும் புதிய திசைக்கு மாறியது. 120 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு, இது பற்றி தயாரிப்பாளரிடம் கூறினேன். அவர் தான் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ஐடியா கொடுத்தார். மேலும் கூடுதல் பட்ஜெட் மற்றும் நாட்களில் படத்தை எடுக்க ஊக்குவித்தார்.

படம் இரண்டு பாகங்களாக மாறியதால் முன்பு இருந்த இடைவேளை காட்சி முக்கிய அதிரடி கிளைமாக்ஸ் காட்சியாக மாறியது. மற்றொரு காட்சியை 10 நிமிட சிங்கிள் ஷாட் ஓப்பனிங் காட்சியாக எடுத்தோம். ஆரம்பத்தில் இந்த 10 நிமிட சிங்கிள் ஷாட் படத்தில் இல்லை.

ஆனால், பட்ஜெட் அதிகரித்ததால் நான் இந்த காட்சியை எடுக்க முடிவெடுத்தேன். அதற்காக நாங்கள் 13 நாட்கள் ஒத்திகை பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம்.

இப்படி பல சிக்கல்களில் முதல் பாகத்தை முடித்துவிட்டோம். முதல் பாகம் வெளியான பிறகு, அதன் வெற்றி இப்போது என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு சிந்தனை வந்தது. இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது முதல் பாகத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறோம்.

இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் 10 நாட்கள் தேவைப்பட்டது, அதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், கூடுதலாக 18 நாட்கள் செலவிட்டுள்ளதால், இன்னும் 35 நாட்கள் தேவைபடுகிறது. முதலில் 4.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்த விடுதலை படத்தின், முதல் பாகத்திற்கான பட்ஜெட் மட்டும் 65 கோடி ரூபாயாக உயர்ந்தது.

முதலில் விஜய் சேதுபதியிடம் இந்த படத்திற்காக 8 நாட்கள் மட்டுமே கேட்டேன். ஆனால் அவர் தற்போது 70 நாட்கள் நடித்துள்ளார்” என்று வெற்றிமாறன் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here