Koose Munisamy Veerappan: வீரப்பனின் வாழ்க்கையை விவரிக்கும் ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடரின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
வீரப்பனின் வாழ்க்கையை ஆவணமாக விவரிக்கும் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜெயச்சந்திர ஹாஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரில் எழுத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரை சரத் ஜோதி இயக்கியுள்ளார்.
இந்த தொடருக்கான ட்ரெய்லர் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், நக்கீரன் கோபால், சீமான், நடிகை ரோகிணி உள்ளிட்ட பலரும் வீரப்பன் குறித்து பேசுகின்றனர். அவர்களது பேச்சுக்கு இடையே வீரப்பனின் காடு, அவர் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இடையே நக்கீரன் கோபால் கூறுகையில், ‘காவல்துறை எழுதியிருப்பதை தான் வீரப்பன் கதையாக பலரும் கூறியுள்ளனர். ஆனால், வீரப்பன் வாய்மொழியிலேயே என்ன நடந்து என சொல்ல வைக்க வேண்டுமல்லவா?’ என கூறுகிறார். அப்போது, வீரப்பன் பேசத்தொடங்கும் காட்சிகள் காட்டப்பட்டன, அத்துடன் ட்ரெய்லர் முடிந்தது.
சுவாரசியமான இந்த தொடரின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும், இந்த தொடர் டிசம்பர் 8ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தொடரின் ரிலீஸுக்காக பலரும் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால், தற்போது ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடரின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக ஜீ5 அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயலால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிப்பட்டு வரும் இந்த சூழலில், ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடரின் ரிலீஸ், டிசம்பர் 8ஆம் தேதியாக இருந்த நிலையில் அதனை டிசம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜீ5 தனது ‘X’ தளத்தில் அறிவித்துள்ளது.