சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக 2021ஆம் ஆண்டு கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், “கடந்த நவம்பர் 2ஆம் தேதி நான் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக மைசூர் சென்றிருந்தேன். அப்போது, எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன்.
அப்போது, அவரை பாராட்டி கைக்குழுக்கியபோது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, என்னை பொதுவெளியில் வைத்து இழிவுப்படுத்தி, தாக்கினார். தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி மீது குற்றவியல் அவதூறு சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், நீதிபதிகள் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், இவர் மீதான அவதூறு வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து விஜய் சேதுபதி தரப்பில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஒரு நடிகர் கட்டுப்பாடுடன் நடந்திருக்க வேண்டும்.
யாரையும் அவதூறாக பேசக் கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர். மேலும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவும் அறிவுறுத்தினர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு நேற்று (ஜன.5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க அறிவுறுத்தப்பட்டதே? அது என்ன ஆனது” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தன்னை குறித்து எதிர்தரப்பினர் தான் அவதூறு பரப்பியதாக விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, விஜய் சேதுபதியின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கில் எதுவும் செய்ய முடியாது, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் கிரிமினல் அவதூறு வழக்கை விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: வெளியானது ‘அயலான்’ டிரைலர்..! ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு!