‘10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்’ – அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

0
91

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை: தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நெல்லை, தூத்துக்குடியில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையைச் சேர்ந்த வீரர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு சார்பிலும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு குறித்துப் பேச அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்தித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். மழை பாதித்த பகுதிகளில் மாணவ, மாணவிகளின் பாடப்புத்தகங்கள் சேத மதிப்பீடு நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். தேவையான பாடப் புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன. உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்குப் பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here