தமிழ் சினிமாவில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். அதனைத் தொடர்ந்து, தமிழில் பல படங்களில் நடித்திருந்தார். மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சுதீப் திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், அதற்காக அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். இது குறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த அற்புதமான என்டர்டெயின்மென்ட் துறையில் 28 அழகான ஆண்டுகள் என்பது எனது வாழ்க்கையில் மிக அழகானதொரு பகுதி.
இந்த ஈடு இணையற்ற பரிசுக்கு முதலில் கடவுளுக்கு நன்றி. மேலும், எனது பெற்றோர், குடும்பம், டெக்னீஷியன்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், எனது சக நடிகர்கள், மீடியா, என்டர்டெயின்மென்ட் சேனல்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கு பெரிய நன்றி.
எனது வாழ்க்கையில் நான் சம்பாதித்த, என் மீது அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும் ரசிகர்களாகிய எனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பெரிய அணைப்பும், அதிகமான அன்பையும் வெளிப்படுத்துக்கொள்கிறேன். இது ஒரு ஏற்ற இறக்கமான வாழ்க்கை, இருந்தபோதிலும் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவர் பதிவில் கூறியதாவது, “நான் குறையற்றவன் அல்ல, நான் சரியானவன் அல்ல, என்னால் முடிந்தவரை முயற்சி செய்து வாய்ப்புகள் வரும் போது என்னால் முடிந்ததைச் செய்கிறேன். என்னை அப்படியே ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.