Chennai floods: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, அவரது கணவர், இரட்டை குழந்தைகள் ஆகியோரை பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட மக்களைப் பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளூர் மக்கள் என பலரும் மீட்டு வருகிறார்கள்.
ஒரே நாளில் பெய்த கனமழையால் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துகொண்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதியான துரைப்பாக்கத்தில் நடிகை நமீதா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது குடியிருப்பில் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இந்த நிலையில் தனது இரட்டை குழந்தைகள், கணவருடன் வசித்து வந்த நமீதாவை அப்பகுதியினர் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து, நேற்று காலை அந்த பகுதி திமுக வட்ட செயலாளர் ஆனந்த் பால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினார். அப்போது, அங்கிருந்த நடிகை நமிதாவிற்கும் நிவாரண பொருள்களை வழங்கினார். தொடர்ந்து, வேறு ஏதாவது உதவிகள் வேண்டுமா? என நமீதாவிடம் கேட்டார். அதற்கு, அவர் இந்த இடத்தை விட்டு வெளியேறினால் போதும் என கூறியிருக்கிறார்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் திமுக வட்ட செயலாளர் ஆனந்த் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர் படகு மூலம் நமீதா, அவருடைய கணவர், இரட்டை குழந்தைகள், நாய்க் குட்டிகளை மீட்டனர்.
இதுகுறித்து நடிகை நமீதா கூறுகையில், “கடந்த 3 நாட்களாக எங்களுக்கு அக்கம் பக்கத்தினர் உதவி செய்தனர். குழந்தைகள் இருப்பதால் எங்களால் அதே வீட்டில் வசிக்க முடியாத நிலை உள்ளது. எங்களைத் தவிர இங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். நாய்க் குட்டிகள் இருப்பதால் எங்களால் இங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. விடுதிகளில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். தற்போது நாங்கள் எங்கள் உறவினரின் வீட்டிற்குச் செல்கிறோம். எங்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர், திமுக நிர்வாகி ஆனந்த் ஆகியோருக்கு நன்றி” என்றார்.