TVK: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். தொடர்ந்து, கட்சி சார்ப்பில் பல்வேறு கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
அதில், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் கட்சி தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி நேற்று (மார்ச் 8) அறிமுகம் செய்யப்படப்பட்டுள்ளது.
இந்த தவெக செயலியில் கட்சியின் முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துக்கொண்டார். இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டார். தொடர்ந்து, அனைவரையும் உறுப்பினராக சேரும் படி கேட்டுக்கொண்டார்.
அந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்து 48 நிமிடங்களில் ஒரு மில்லியன் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இத்தனை பேர் விண்ணப்பிக்க தொடங்கியதும் சர்வரே செயலிழந்துபோனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருப்பதாக உறுப்பினர் சேர்க்கை துணை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, சில தினங்களில் 50 லட்சமானது ஒரு கோடியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து வருகின்றனர்.