Daniel Balaji: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் டேனியல் பாலாஜி (48).
தொடர்ந்து ‘காக்க காக்க’, ‘பொல்லாதவன்’, ‘பைரவா’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.
பல்வேறு படங்களில் நடித்து பிஸியாக இருந்த டேனியல் பாலாஜிக்கு நேற்று (மார்ச்.29) இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு, அவருக்கு சினிமா பிரபலங்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் கவுதம் மேனன், அமீர், வெற்றிமாறன் ஆகியோர் நேற்று இரவே டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.