‘கேப்டன் மில்லர்’ இசை வெளியீட்டு விழா தொடக்கத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்திற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் விஜயகாந்த்திற்காக பாடல் ஒன்று பாடி தனது அஞ்சலியை செலுத்தினார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. தனுஷூடன் ஜோடியாக பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது உள்ள காலக்கட்டத்தில் நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜன.03) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடகத்தில் சமீபத்தில் காலமான நடிகர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி தொடங்கி படத்தின் நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் படம் குறித்து பேசினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் கதாநாயகன் நடிகர் தனுஷ், மறைந்த விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது பாடலை பாடினார்.
‘ராசாவே உன்ன காணாத நெஞ்சு’ என நடிகர் தனுஷ் மனமுருகி பாடி விஜயகாந்த்திற்கு தனது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, இந்த பாடலை தனுஷுடன் சேர்ந்து அங்கிருந்த ரசிகர்களும் பாடி தங்களது அஞ்சலியை செலுத்தினர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி, சிவக்குமார் கண்ணீர் மல்க அஞ்சலி!