‘Jayam Ravi’: ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸாகி மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து அவர் ‘காதலிக்க நேரமில்லை’, ‘பிரதர்’, ‘தக்லைப்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி குறித்த புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜெயம் ரவி ஒரு படத்தை இயக்கவுள்ளார். அவர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். முன்னதாக ‘சைரன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக நேர்காணலில் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இருவரும் கலந்துகொண்டனர்.
அப்போது ஜெயம் ரவி தான் இயக்கவுள்ளதாகவும், யோகி பாபு தான் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறினார். மேலும், தன்னிடம் இருந்த 500 ரூபாயை யோகி பாபுவிடம் அட்வான்ஸாக கொடுத்து புக் செய்துகொண்டார்.
இந்த வீடியோவைக் கண்ட ரசிகர்கள், விளையாட்டாக இருவரும் பேசுவதாக நினைத்திருந்தனர். ஆனால், ஜெயம் ரவி உண்மையாகவே படத்தை இயக்க இருப்பதாகவும், அவரிடம் மூன்று கதைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மூன்று கதைகளில் ஒன்று தான் யோகி பாபு வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரசிகர்கள் அண்ணனைத் தொடர்ந்து படங்களை இயக்கவுள்ள ஜெயம் ரவிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.