‘சீரியஸ் கேரக்டரில் நடிக்கும் சதீஷ்’ – அப்டேட் கொடுத்த இயக்குநர்..!

0
93

Actor Sathish: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக நுழைந்து படிப்படியாக கதாயாகர்களாக உயர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சதீஷ் மெல்ல மெல்ல ஹீரோவாக உருவாகி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த ‘நாய் சேகர்’, ‘கான்ஞ்சுரிங் கண்ணப்பன்’ படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அந்த வகையில் தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘வித்தைக்காரன்’ படத்தில் நடிக்கிறார். இதில், சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார்.

மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு வி.பி.ஆர். இசையமைத்துள்ளார். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குநர் வெங்கி கூறியதாவது, “விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு பொருளை கொள்ளையடிக்க மூன்று குழு திட்டமிடுகிறது. யார் அதை எடுக்கிறார்கள் என்பதுதான் படம்.

சதீஷ், மேஜிக் நிபுணராக இதில் நடிக்கிறார். காமெடியனாக இதுவரை நடித்த அவர், இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். குறிப்பாக முதன்முறையாக இரண்டு வேடங்களில் அவர் நடிக்கிறார்.

கொள்ளை அடிக்கும் ஒரு கும்பலின் தலைவராகவும், அந்த கும்பலை பிடிக்க போராடும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். விமான நிலையம் தொடர்பான காட்சிகளை உண்மையான விமான நிலையத்திலும், செட் அமைத்தும் படமாக்கினோம்.

இந்தப் படம் ரசிகர்களுக்கு திரில்லிங்கான அனுபவத்தைக் கொடுக்கும். சதீஷிற்கும் திருப்பம் தரும் படமாக இருக்கும். வருகிற 23ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

சமீபத்தில், இந்த படத்தின் புதிய பாடலான ‘சுனாமிகா’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here