Actor Sathish: இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘வித்தைக்காரன்’ (Vithaikkaran) படத்தில் நடிக்கிறார். இதில், சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார்.
மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு வி.பி.ஆர். இசையமைத்துள்ளார். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இன்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் சதீஷ், “முதலில் விஜய் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவருடைய ஆசிர்வாதத்துடன் இந்த படத்தை தொடங்கினோம். சமீபத்தில் கூட அவர் என்னை கன்ஜூரிங் கண்ணப்பன் படம் பார்த்துவிட்டு தனிப்பட்ட முறையில் பாராட்டினார்.
அவருடைய புதிய முயற்சியான அரசியலும் அவருக்கு எல்லா வெற்றிகளையும் தர வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன். இந்த வித்தைக்காரன் படமானது இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாநாயகி என அனைவருக்கும் முதல் படமாகும்.
இப்படி அறிமுக நடிகர்களை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் புலனாய்வு பத்திரிகையாளராக சிம்ரன் நடிக்கிறார்.
சிம்ரனின் உரையாடலை நான் பாராட்டுகிறேன். மேலும், அவரது புதிய தொழில் தொடங்கியிருக்கிறார் அதிலும் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார். வித்தைக்காரன் படம் வருகிற 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.