‘Actor Vijay’: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் மாபெறும் வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க அவர் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் அஜித் திடீரென சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இன்று ஒரு நாள் முழுவதும் அப்போலோ மருத்துவமனையில் அஜித் தங்கி, உடல் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து நாளை அஜித் வீடு திரும்புவதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றன. மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள கேரளா, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், செல்போன் மூலம் அஜித் உதவியாளர்களுக்கு தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தொடர்ந்து, தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், நடிகர் அஜித் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்தியிருந்தார். தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜாவும் அஜித் விரைவில் குணமடைய வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தற்போது நடிகர் அஜித் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். இந்த நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் விஜய் நேற்று இரவு அஜித்குமாரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும், உடல் நலனை கவனத்தில் கொள்ளுமாறு அன்போடு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.