தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்தநாளை இன்று அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை காமராஜர் சாலையிலுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவபடத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.