நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். லால் சலாம் படம் ஒரு கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.
இந்த நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது, “இது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். ‘லால் சலாம்’ திரைப்படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
நான் சமீபத்தில் எனது தந்தை குறித்து அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கேட்கும்போது மிகவும் கோபமாக இருந்தது.
இது குறித்து உங்களிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்திருந்தால் ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருக்க மாட்டார்” என பேசினார்.