‘AK 63 Title’: நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் அஜர்பைஜான் செல்ல இருக்கிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து, விஷால், எஸ்,ஜே,சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என அனைவருக்கும் தெரியும், அவர், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தபோது அஜித்திடம் கதை கூறியிருக்கிறார். அந்த கதை அஜித்துக்குப் பிடித்துப்போனதால் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது படம் குறித்த இரண்டு அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த புதிய படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.
மேலும், இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள நிலையில் தற்போது மீண்டும் அஜித்தின் அடுத்த படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான ‘வீரம்’ திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். அந்த படத்தில் வரும் பிஜிஎம் மற்றும் பாடல்கள் அனைத்து மெகா ஹிட்டானது.
அந்த வகையில் தற்போது தொடர்ந்து அஜித்தின் அடுத்தடுத்த படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதால் படத்தில் வரும் பிஜிஎம்-க்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பாப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ‘AK 63’ படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.