கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த அண்ணாமலையை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அப்போது விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் உறுப்பினர் செயல் கண்டிக்கத்தக்கது. காவல் துறையினர் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டமான மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதனால், மொத்தம் நான்கு கோடி பேர் வீடு கட்டியுள்ளனர்.
ஆனால், அந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் ‘கருணாநிதி கனவு இல்லம் திட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு பட்ஜெட்டில், ஒவ்வொரு முறையும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்படும்.
ஆனால், அப்படி எந்த பூங்காவும் இதுவரை கட்டப்படவில்லை. அது, கோயம்புத்தூர் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் செயலாக இருக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.