‘Boat Movie Update’: இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் ‘போட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்புதேவன்.
கடைசியாக 2015ஆம் ஆண்டு விஜய்யை வைத்து ‘புலி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து ‘கசட தபற’, ‘விக்டிம்’ போன்ற ஆந்தாலஜி படங்களை இயக்கினார்.
இதையடுத்து சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு சிம்பு தேவன் யோகிபாபுவை வைத்து ‘போட்’ (BOAT) என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் டீஸர் நேற்று (டிச.17) வெளியிடப்பட்டது. இந்த டீசரை ‘போட்’ படக்குழுவினர் துபாயில் இருந்தவாறு வெளியிட்டனர். தற்போது துபாயில் இருக்கும் படக்குழுவினரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
படத்தின் கதை என்ன தெரியுமா?:
‘போட்’ படம் ஒரு பீரியாடிக் படம் எனவும் இந்த படத்தின் கதை கடல் சார்ந்த பயணமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. படம் முழுவதும் கடலில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை, 1940-களின் பின்னணியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மீது ஜப்பான் குண்டு வீசியபோது உயிருக்குப் பயந்து 10 பேர் சின்ன படகில் தப்பிக்கிறார்கள். நடுக்கடலில் அந்தப் படகு நின்று விடுகிறது. இந்த சூழலில் அங்கிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? என்பது தான் கதை.