Cherukuri Maanasa Choudhary: இயக்குநர் ரவிகாந்த் பெரும்பு இயக்கத்தில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘பப்பில்கம்’. இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் செருகுரி மானசா சவுத்ரி.
சென்னையில் பிறந்து, வளர்ந்த மானசா சவுத்ரி எம்.ஏ.ஆங்கிலம் முடித்திருக்கிறார். தொடர்ந்து, மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
அதன்படி, தனது 16 வயதிலேயே இவர் மாடலிங் உலகிற்குள் நுழைந்தார். மேலும், இவர் நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மீது ஆர்வம் கொண்டவர்.
அதன் தொடர்சியாக அவரது பாதை நடிப்பை நோக்கி வந்தடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது செருகுரி மானசா சவுத்ரி தமிழ் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் மானசா சவுத்ரி பேசுகையில், “தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக விரும்பினேன். ஆனால், தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் அதன் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளேன்.
இருந்தபோதிலும், இப்போது தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையிலேயே பிறந்து, வளர்ந்ததால் தமிழ் எனக்கு சரளமாக பேசத் தெரியும். இதனால், தமிழில் நான் நடிக்கும் படங்களில் நானே டப்பிங் செய்யவுள்ளேன்.
தொடர்ந்து, பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், கூடிய விரைவில் நான் நடிக்கும் படங்கள் குறித்த முறையான அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.