Amit Shah about CAA: மத்திய அரசு சிஏஏ-வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிட்டது. மேலும், இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாகவும் அறிவித்தது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்வதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “குடியுரிமை திருத்தச் சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படமாட்டாது. நமது நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை.
அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு எங்களை குற்றம் சாட்டுவதை விட வேறு ஏதும் செய்யவில்லை.
பாஜக தனது தேர்தல் அறிக்கையிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. 2019ஆம் ஆண்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆனால், கொரோனா காரணமாக இதனை அமல்படுத்த கால தாமதம் ஆகிவிட்டது. தற்போது இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது” என கூறினார்.