‘Lokesh Kanagaraj’: லியோ பட இயக்குநர் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் ‘லியோ’. இந்தப் படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
இதையடுத்து ஓடிடியில் வெளியானபோதும் லியோ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், லியோ பட இயக்குநர் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில், “விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் கலவரம், சட்டவிரோத செயல்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல் துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்பன போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இந்த காட்சிகள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை லோகேஷ் கனகராஜ் காட்டியிருக்கிறார். இதுபோன்ற திரைப்படங்களை தணிக்கை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவேண்டும். இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யவேண்டும்.
வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை படமாக்கியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்படக்குழு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த படத்தை தடை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜன.03) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத காரணத்தால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ராசி பார்த்து சம்பளம் வாங்கும் அஜித்?.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?..