திரிஷா விவகாரம்: மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து..!

0
145

‘mansoor ali khan’: நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார்.

மன்சூர் அலிகானின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மேலும், நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்க, நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த சூழ்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், தனது முழு வீடியோவையும் பார்க்காமல் நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்தனர்.

மேலும், இதற்காக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மன்சூர் அலிகான் தரப்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிதி நெருக்கடியில் இருப்பதால் ஒரு லட்சம் ரூபாயை செலுத்துவதற்கு பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைக்கேட்ட நீதிபதி, ஒருவர் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்து 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் இன்னொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “அபராத பணம் ஒரு லட்சத்தை கட்டுவதாக தனி நீதிபதியிடம் ஒப்புக்கொண்டு கால அவகாசமும் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த தீர்ப்பை ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய முடியாது. அதே நீதிபதியிடம் உத்தரவை திரும்ப பெற கோரிக்கை வைக்கலாம். அல்லது பணம் கட்ட முடியும், முடியாது என்பதை அவரிடத்தில் தெரிவிக்கலாம்” என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தற்போது நடிகை திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை திரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது செல்லும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here