‘Thulladha Manamum Thullum’: தமிழ் சினிமாவில் காதல் படங்களில் மிக முக்கியமானவைகள் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘தீபாவளி’ போன்ற மென்மையான காதல் படங்களை இயக்கியவர் இயக்குநர் எழில்.
இவர் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு காதல் படங்களையும் இயக்காமல் காமெடி படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அந்த வகையில், இவர் இயக்கத்தில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘தேசிங்கு ராஜா’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஹிட்டானது.
இந்த நிலையில், இயக்குநர் எழில் இயக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகவுள்ள படம் ‘தேசிங்கு ராஜா 2’. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமல், இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
மேலும், நகைச்சுவை நடிகர்கள் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பல காமெடி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது ‘தேசிங்கு ராஜா 2’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அதில், இயக்குநர் எழில் இயக்கிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் ரிலீஸ் ஆகி 25ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தை வருகிற கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.