Dhruva Natchathiram: கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2017ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018ஆம் ஆண்டில் முடிவடைந்து திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக ரிலீஸ் ஆகுவது தள்ளிப்போனது.
இதையடுத்து, கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
கடந்த நவம்பர் 22ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பணத்தை திரும்ப கொடுத்த பின்னர் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து பணத்தை திரும்பி செலுத்தாததால் படத்தை இதுவரை வெளியிட முடியாமல் இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதால் இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், ‘துருவ நட்சத்திரம்’ படம் பிபரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
‘துருவ நட்சத்திரம்’ படம் வருகிற மார்ச் 29ஆம் தேதி கட்டாயம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு கூடிய விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படம் கேரளாவில் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.