Director Atlee: டெல்லியில் நேற்று ‘NDTV-ன் இந்தியன் ஆஃப் தி இயர்’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘ஜவான்’ படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை அட்லீ பெற்றார். இந்த விருதினை மத்திய அமைச்சரான ஹர்தீப் புரி அட்லீக்கு வழங்கினார்.
அப்போது, அங்கு ‘இந்த ஜவான் படத்தை ஷாருக்கனை வைத்து இயக்க வேண்டும் என நினைத்ததற்கு என்ன காரணம்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அட்லீ, “ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய நடிகர். அவரை வைத்து சமூக கருத்து நிறைந்த ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தேன்’ என்றார்.
அதனைத் தொடர்ந்து அவர், ஷாருக்கானை 2019ஆம் ஆண்டு சந்தித்த நிகழ்வை நெகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார். “நானும் ஷாருக்கான் சாரும் 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியைக் காண சென்றோம். அப்போது நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலானது.
அந்த புகைப்படத்தைப் பார்த்து சில பேர் வாழ்த்தினார்கள், பல பேர் அதை விமர்சனம் செய்தனர். ஷாருக்கானுடன் சேர்ந்து எப்படி இவனால் படம் எடுக்க முடியும்? இவன் எல்லாம் சரியான ஆளா?, அவர் முன்னாடி நிற்பதற்கு தகுதி இருக்கா? என பல விமர்சனம் வந்தன.
அந்த விமர்சனங்கள் எல்லாவற்றிற்கும் இந்த விருது தான் பதில். அனைத்து ஹேட்டர்ஸ்க்கும் எனது நன்றி” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து இந்த விருதை பெற்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்.
உங்கள் கனவை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள், உங்களுக்கு எது சரி என தோன்றுகிறதோ அதனை நோக்கி பயணியுங்கள் கட்டாயம் வெற்றி கிடைக்கும்” என்றார். அட்லீயின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.