Lokesh Kanagaraj: மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளர்களாக பிரபலமான அன்புமணி, அறிவுமணி என்ற இரட்டை சகோதரர்கள், கேஜிஎஃப் படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக இருந்து தேசிய விருதைப் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் சண்டை பயிற்சியாளர்களாக இருந்து அசத்தியுள்ளனர்.
இவர்கள், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து அன்பு, அறிவு ஆகிய இருவரும் தற்போது கமல்ஹாசனை வைத்து படத்தை இயக்கவுள்ளனர்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ‘KH237’ படத்தில் நடிப்பதை பெருமையாக நினைப்பதாகவும், இருவரையும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு அழைப்பதில் மகிழ்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அன்புமணி, அறிவுமணி இருவரும் சேர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்திற்கான பாதி வேலைகள் நடந்து முடிந்ததாகவும் விரைவில் ஷூட்டிங் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.