சென்னையில் ‘புளூ ஸ்டார்’ படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் படத்தை தயாரித்த இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது. “இந்த படம் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை தயாரிக்க முன்வந்த கணேச மூர்த்தி மற்றும் சவுந்தர்யா ஆகியோருக்கு மிக்க நன்றி.
எங்களை நம்புகிறவர்கள் மட்டும்தான் எங்களிடம் வருவார்கள். ஏனென்றால் நான் பேசும் அரசியல் அப்படிப்பட்டது. சிலர் என்னை வெறும் ரஞ்சித்தாக மட்டும் பார்ப்பதில்லை, நான் பேசும் அரசியலோடு சேர்த்துதான் பார்க்கின்றனர்.
நான் அடையாள அரசியல் செய்வதாகவும், குறிப்பிட்ட சாதி ஆட்களோடு மட்டுமே வேலை செய்வதாகவும் கூறுகின்றனர். ஆனால் அதனையெல்லாம் நான் நம்புவது கிடையாது. எனக்கு என்ன தேவையோ அதைதான் நான் செய்து வருகிறேன்.
எனது உழைப்பையும், நான் பேசும் அரசியலையும் முழுமையாக நம்புகிறேன். நான் நம்பும் தத்துவம் தான் என்னை ஒரு சரியான பாதையில் வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் யாரையும் தேடிப் போனது இல்லை.
ஆனால் நான் பேசும் அரசியல் நிறைய பேரை என்னிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. என்னையும், நான் பேசும் அரசியலையும் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே என்னுடன் பணியாற்ற முடியும்.
நான் யார் என்பதை சொல்வதில் வெளிப்படையாக இருக்கிறேன். அந்த வெளிப்படைத்தன்மை, அரசியல் மற்றும் தத்துவத்தை புரிந்து கொண்டு என்னுடன் பணியாற்றியவர்கள்தான் இன்று இந்த மேடையில் இருக்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: ‘STR 48’ : மாஸ் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்..!