‘டீன்ஸ்’ படம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் – பார்த்திபன்..!

0
124

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களை இயக்கியும், நடித்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவர் தற்போது, ‘டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக்கிற்கு படக்குழு தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம், பர்ஸ்ட்லுக்கிற்கு தணிக்கை சான்றிதழ் பெற்ற முதல் படம் என்ற பெருமையை ‘டீன்ஸ்’பெற்றுள்ளது.

இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பார்த்திபன், “நான் கடந்த 34 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். வித்தியாசமான படங்களை உருவாக்குகிறேன் என அனைவரும் கூறுகின்றனர்.

சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறேன். இந்த நிலையில் ‘டீன்ஸ்’ படத்தின் முதல் பார்வையை திரையரங்குகளில் வெளியிட நினைத்தேன், ஆனால் அதற்கு சென்சார் சான்றிதழ் தேவைப்பட்டது.

சென்சார் அதிகாரிகளை நான் அணுகியபோது, ஒரு படத்தின் முதல் பார்வைக்கு சான்றிதழ் அளிப்பது இதுவே முதல்முறை என்றார்கள். உடனடியாக நான் அதை பெறுவதற்கான வேலையை செய்தேன், இப்படித்தான் இது சாத்தியமானது.

இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் ‘டீன்ஸ்’ உருவாவதற்கு முக்கிய காரணம். ‘இரவின் நிழல்’ படத்தை அவர்கள் தான் தயாரித்தனர். முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை ‘இரவின் நிழல்’ ஈட்டித் தரவில்லை.

இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து குழந்தைகளுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். இந்தப் படம் சோதனை முயற்சியாக இருக்காது, அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இசையமைப்பாளர் இமானுடன் நீண்ட காலமாக பணியாற்ற விரும்பினேன், அது இப்போது தான் நடந்துள்ளது. எனது அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற நினைத்தேன்.

ஆனால், இப்போது இமானுடன் தொடர்ந்து பணிபுரிய முடிவு செய்துள்ளேன். ‘டீன்ஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here