சென்னையின் முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்குநராக அறிமுகமான படம் ‘என்றாவது ஒரு நாள்’. இந்த படத்தில் நடிகர் விதார்த், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களில் 43 விருதுகளை வென்றது.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றி துரைசாமி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போனதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கஷாங் நாலா NH 05 இல் சுற்றுலா இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.
வெற்றி துரைசாமியுடன் பயணித்த மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டென்சின் என்ற கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார்.
ஆனால், வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை என்பதால் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.