பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. இவர், சோழிங்கநல்லூர் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ரவிக்குமார் என்பவரது இருசக்கர வாகனத்தின் மீது மதுமிதா கார் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ரவிக்குமார், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக மதுமிதா மீது பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, விபத்தில் காயம் அடைந்த ரவிக்குமார் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பி இருக்கிறார். மேலும், இவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே மதுமிதா மது போதையில் வாகனம் ஓட்டியதன் காரணமாக தான் விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவி வந்தன. இந்த நிலையில், தற்போது இது குறித்து நடிகை மதுமிதா விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஒரு காவலர் மீது மோதியதாகவும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
அதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கு மதுப்பழக்கமே கிடையாது. ஒரு சிறிய விபத்து நடந்தது உண்மைதான். அந்த காவலர் தற்போது நலமுடன் தான் இருக்கிறார். நானும் நலமாக இருக்கிறேன். எனவே போலியான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம், நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.