இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, கோவை சரளா, ஆனந்த் ராஜ், யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்தது. அதன்படி படத்தில் ‘உதிரன்’ என்ற கதாபாத்திரத்தை படக்குழு தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
அந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க உள்ளார். பாபி தியோலின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
மேலும் இந்த போஸ்டரை நடிகர் சூர்யா தனது ‘X’ தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், நடிகர் பாபி தியோலுக்கு ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.