இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் ‘ஹனுமான்’. தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசை அமைத்திருக்கின்றனர். மேலும், இந்தப் படத்தை ‘ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட்’ எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், இப்படம் ஜனவரி 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் தமிழ் பதிப்பினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் தேஜா சஜ்ஜா, ‘ஹனுமான் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இது தெலுங்குப் படமல்ல, நேரடித் தமிழ் படம் மாதிரி தான் இருக்கும்.
டிரைலரில் படத்தின் தன்மை உங்களுக்குத் தெரியும். படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை வெளியிடுகிறார்கள் அவர்களுக்கு எனது நன்றி. இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை தான். இந்தப் படத்தில் ‘அஞ்சனாத்ரி’ என்ற உலகை உருவாக்கி உள்ளோம்.
ஒரு பையனுக்கு அனுமனின் சக்தி கிடைப்பது தான் கதை. வினய், வரலட்சுமி, அம்ரிதா என அனைவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர். நம் தென்னிந்தியக் கலாச்சாரத்தில், பொங்கலுக்கு 4, 5 படங்கள் பார்க்கும் வழக்கம் இருக்கிறது.
அது போல் இந்தப் பொங்கலுக்கு எங்கள் படத்தையும் பார்த்து ஆதரவு தாருங்கள். இது ஓடிடியில் பார்க்க வேண்டிய படமல்ல, திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து, அனுபவிக்க வேண்டிய படம்” என்றார்.
இதையும் படிங்க: ‘ஜெய்’ – ‘அஞ்சலி’ காதல் பிரேக்கப் உண்மையா?.. மனம் திறந்த நடிகை அஞ்சலி..!